நெருக்கடிகளை கையாள்வதற்கு அரசியல்வாதிகள் – விஞ்ஞானிகள் இடையில் சிறந்த ஒத்துழைப்பு தேவைப்படுவதாக சுவிஸ் அரசாங்கத்தின் அமைச்சரவை செயலாளர் தெரிவித்துள்ளார்.
இருதரப்புக்கும் இடையிலான பரஸ்பர அங்கீகாரத்தின் தேவையை கொவிட் தொற்றுநோய் எடுத்துக்காட்டியிருப்பதாக Walter Thurnherr சுட்டிக்காட்டியுள்ளார்.
இரு தரப்பினரும் மிகவும் வேறுபட்டவர்கள், அரசியல்வாதிகள் – விஞ்ஞானிகளுக்கு இடையிலான தொடர்புகள் குறைவு என்று அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
சில அரசியல்வாதிகள் ஆராய்ச்சியாளர்களின் இருப்பைப் பற்றி கூட அறிந்திருக்கவில்லை என்றும், சில விஞ்ஞானிகளுக்கு அடக்க உணர்வு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொவிட் நெருக்கடியின்போது செய்யப்பட்ட சில தவறுகள் மீண்டும் நிகழாமல் இருக்க வேண்டுமாயின், உண்மைகள் மற்றும் கருத்துகளின் பரிமாற்றம் நிறுவனமயமாக்கப்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கம் தனது அறிவியல் ஆலோசனை பணிக்குழுவை அமைப்பதில் மிகவும் தாமதித்துள்ளது என்றும் அவர் குறிப்பாக விமர்சித்தார்.
அரசாங்கத்தின் கோவிட் கொள்கையை மதிப்பீடு செய்ய Thurnherr பணிக்கப்பட்டுள்ளார்.
கூட்டாட்சி அமைப்பையும் நேரடி ஜனநாயகத்தையும் முக்கிய தூண்களாகக் கொண்டுள்ள சுவிஸ் அரசியல் அமைப்பு, நெருக்கடிகளைக் கையாளத் தகுதியற்றது என்ற குற்றச்சாட்டை அவர் நிராகரித்தார்.