Search

Menu

Keeping you Informed News and Views..

கியூபாவில் நடப்பது என்ன? ஃபிடல் காஸ்ட்ரோவின் கம்யூனிச சாம்ராஜ்யம் சரிகிறதா?

மக்கள் தங்களுக்கு ’சர்வாதிகாரம் வேண்டாம் என்றும், விடுதலைதான் வேண்டும்’ என்றும் ஆங்காங்கே முழுக்கம் இட்டும் வருகின்றனர்.

கியூபாவில் நடப்பது என்ன? ஃபிடல் காஸ்ட்ரோவின் கம்யூனிச சாம்ராஜ்யம் சரிகிறதா?

கியூபாவில் பல ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். ஞாயிறன்று கியூபாவின் சான் டியாகோ நகரில் தொடங்கிய இந்த போராட்டம் பின்பு நாடும் முழுவதும் பரவியது.

கியூபாவில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனா பெருந்தொற்றை அரசு கையாண்ட விதம்தான் இந்த போராட்டத்துக்கு காரணம்.

உணவுக்காக நீண்ட வரிசையில் காத்திருப்பதும், கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஒரு பக்கம் அதிகரிப்பதும் மறுபுறம் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதும் மக்களை கடுமையான கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது. இதை தவிர கடுமையான மின்வெட்டும் மக்களை அதிருப்தியின் உச்சத்திற்கு அழைத்து சென்றுள்ளது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டக் களத்தை தேர்ந்தெடுத்துள்ளனர்.

கம்யூனிஸ புரட்சி நாடான கியூபாவில் காஸ்ட்ரோ குடும்பத்தினரின் சகாப்தம் சில மாதங்களுக்கு முன் முடிவுக்கு வந்து மிகல் டியாஸ் கனால் அதிபரானார்.

நாடு முழுவதும் நடைபெறும் போராட்டத்தில், மக்கள் தங்களுக்கு ’சர்வாதிகாரம் வேண்டாம் என்றும், விடுதலைதான் வேண்டும்’ என்றும் ஆங்காங்கே முழுக்கம் இட்டும் வருகின்றனர்.

கியூபாவில் அரசுக்கு எதிராக போராடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை நன்கு அறிந்தும் மக்கள் வீதியில் இறங்கியுள்ளனர். போராட்டக்காரர்கள் தாக்கப்படும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் காணமுடிகிறது. நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு படையினர் பெப்பர் ஸ்ப்ரே கொண்டு போராட்டக்காரர்களை ஒடுக்க முயற்சித்து வருகின்றனர்.

கியூபாவில் அனுமதியின்றி கூட்டம் கூடுவது சட்ட விரோதம். அங்கு போராட்டங்களும் அரிதாகவே நடைபெறும். கியூபாவை பொறுத்தவரை காஸ்ட்ரோவின் ஆட்சிக்காலத்திலிருந்தே அங்கு இணைய வசதி பரவலாக கிடைக்கும் ஒன்று. ஆனால் இணைய சேவையை அரசு நிறுவனம்தான் வழங்குகிறது. எனவே போராட்டம் குறித்து சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுவதால் பல்வேறு இடங்களில் சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

கொரோனா பெருந்தொற்றின் முதல் அலை ஏற்பட்ட போது கியூபா பெரிதும் சமாளித்து கொண்டது. ஏன் தன் மருத்துவர்களை பிற நாட்டிற்கும் கூட அனுப்பி வைத்தது கியூபா.

ஆனால் இந்த இரண்டாம் அலையில் ஆட்டம் கண்டு விட்டது என்றே சொல்லலாம். நாள் ஒன்றுக்கு அங்கு 5 ஆயிரம் பேருக்கு மேல் தொற்று ஏற்படுகிறது. சமீபமாக ஒரே நாளில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்

கொரோனா பெருந்தொற்றை அரசு சரியாக கையாளவில்லை என்பதே போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்கள் சொல்லும் காரணம். இரண்டாம் அலையில் பலர் மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் இறந்துள்ளனர்.

மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை கூறி போராடும் மக்களை கியூபா தனது சொந்த தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது என்று கூறி ஆறுதல்படுத்த முயற்சி செய்து வருகிறார் அந்நாட்டின் அதிபர்.

ஆம் கியூபா உலக நாடுகளிலிடமிருந்து தடுப்பு மருந்தை இறக்குமதி செய்யாமல் ஐந்து தடுப்பு மருந்துகளை உருவாக்கி வருகிறது. அதில் ஒன்றுதான் ’சொபெரானா’ (இறையாண்மை) தடுப்பு மருந்து. இது அறிகுறிகள் தென்படும் நோயாளிகளில் 91 சதவீத பலனை அளிப்பதாக தெரிவித்திருந்தது கியூபா.

கொரோனா தொற்று சுகாதார கட்டமைப்பை சிதைப்பது ஒருபுறம் இருக்க, கொரோனா கட்டுப்பாடுகளால் கியூபாவின் சுற்றுலாத் துறையும் பெரிதும் ஆட்டம் கண்டுள்ளது. கியூபாவின் பொருளாதாரம் சுற்றுலாத்துறையை பெரிதும் சார்ந்துள்ளது என்பதை இங்கே நினைவுகூர்வது அவசியம்.

கியூபாவை பொறுத்தவரை 1959ஆம் ஆண்டிலிருந்து ஒரே ஒரு கட்சிதான் ஆண்டு வருகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவோடு கியூபாவை ஆட்சி செய்துவந்த பாடிஸ்டாவுக்கு எதிராக கொரிலா போர் புரிந்து வெற்றி பெற்று 1959ஆம் ஆண்டு கியூபாவின் அதிபரானார் ஃபிடல் காஸ்ட்ரோ.

Fidel Castro

அதன்பின் 2008-ம் ஆண்டு தனது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம் ஆட்சியை ஒப்படைத்தார் ஃபிடல். கடந்த ஏப்ரல் மாதம் 89 வயதான ராவுல் காஸ்ட்ரோ அதிபர் பதவியிலிருந்து விலகி காஸ்ட்ரோ சகாப்தத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தார். ராவுல் காஸ்ட்ரோவுக்கு பிறகு அதிபரானார் மிகல் டியாஸ் கனால்.

1959ஆம் ஆண்டு ஃபிடல் பெற்ற வெற்ற, கம்யூனிசத்தின் வெற்றியாக கருதிய அமெரிக்க அதை ஒடுக்க நினைத்து கியூபாவின் பொருளாதாரத்தை நசுக்க பல்வேறு தடைகளை விதித்தது.

ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில்தான் அந்த தடைகள் தளர்த்தப்பட்டன. ஆனால் டிரம்பின் ஆட்சிக்காலத்தில் அந்த தடைகள் மேலும் கடுமையாக்கப்பட்டன.

தற்போது பைடன் ஆட்சிக்கு அந்த பிறகு இந்த தடைகள் நீக்கப்படும் என்று வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தாலும் தனது ஆட்சியின் முக்கிய கடமைகளில் ஒன்றாக அது இல்லை என்று பைடன் நிர்வாகம் கைவிரித்துவிட்டது.

கியூபா, காஸ்ட்ரோவின் காலத்திலிருந்து அமெரிக்காவுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வரும் நிலையில், கிட்டதட்ட 1962ஆம் ஆண்டிலிருந்து அந்நாட்டின் மீது பல தடைகளை விதித்துள்ளது அமெரிக்கா.

கியூபாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு அமெரிக்காவின் இந்த தடையும் காரணம். கிட்டதட்ட நான்கு மணி நேரம் தொலைக்காட்சியில் உரையாற்றிய கியூபாவின் அதிபர் தற்போது ஏற்பட்டுள்ள இந்த பதற்றத்துக்கு அமெரிக்காதான் காரணம் என்று தெரிவித்துள்ளார். போராட்டக்காரர்கள் அமெரிக்காவால் தூண்டி விடப்படுகிறார்கள் என்றும் அதற்கு அமெரிக்கா நிதி உதவி வழங்குகிறது என்றும் ஆட்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மறுபுரம் பல தசாப்தங்களாக கியூபாவை எதிரியாக பாவித்து வரும் அமெரிக்கா கியூபாவின் மக்களின் பக்கம் நிற்பதாகவும், ஆட்சியில் உள்ளவர்கள் போராட்டத்தை ஒடுக்குவதை விடுத்து மக்களின் குறைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

கியூபாவில் நடப்பது என்ன? ஃபிடல் காஸ்ட்ரோவின் கம்யூனிச சாம்ராஜ்யம் சரிகிறதா?

மக்கள் தங்களுக்கு ’சர்வாதிகாரம் வேண்டாம் என்றும், விடுதலைதான் வேண்டும்’ என்றும் ஆங்காங்கே முழுக்கம் இட்டும் வருகின்றனர்.

கியூபாவில் நடப்பது என்ன? ஃபிடல் காஸ்ட்ரோவின் கம்யூனிச சாம்ராஜ்யம் சரிகிறதா?

Search here