Search

Menu

Keeping you Informed News and Views..

ஜெருசலேம் புனிதத் தலத்தில் வெடித்த வன்முறை! என்ன காரணம்?

உடனடியாக மோதலை நிறுத்திக்கொள்ளுங்கள், முழு போரை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறீர்கள் - ஐ.நா

ஜெருசலேம் புனிதத் தலத்தில் வெடித்த வன்முறை! என்ன காரணம்?

ரமலான் மாதத்தில் கிழக்கு ஜெருசலேமிலுள்ள Damascus Gate Plaza எனும் இடத்தில் இஸ்லாமியர்கள் கூடுவது வழக்கம். கடந்த ஏப்ரல் 12 ஆம் திகதி இஸ்லாமியர்கள் அங்கு கூடுவதைத் தடுக்கும் வகையில் தடுப்புகளை அமைத்தது இஸ்ரேல் காவல்துறை. இதையடுத்து ஏப்ரல் 16 அன்று அல் அக்‌ஷா மசூதியில் தொழுகை நடத்துவதற்கும் சில கட்டுப்பாடுகளை விதித்தது இஸ்ரேல். இதையடுத்து கிழக்கு ஜெருசலேமில் பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியது. தொடர்ந்து பாலஸ்தீனியர்கள் சிலரை அவர்கள் வாழும் பகுதியிலிருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேற்றியதாகவும் சொல்லப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த மே 7 ஆம் திகதி இஸ்ரேல் காவல்துறையினருக்கும், இஸ்லாமியர்களுக்கும் அல் அக்‌ஷா மசூதியில் மோதல் ஏற்பட்டது. இதில் 200 இற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் காயமடைந்தனர். தொடர்ந்து கடந்த திங்களன்று (மே 10) மசூதிக்குள் நுழைந்து சோதனை நடத்தியது இஸ்ரேல் ராணுவம். இந்தச் சோதனையின்போது இஸ்ரேல் ராணுவம் அங்கிருந்த பாலஸ்தீனர்களைத் தாக்கியதாக தகவல்கள் சொல்லப்படுகின்றன. இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்திருக்கிறது.

அல் அக்‌ஷாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலுக்குப் பதில் தாக்குதல் நடத்தியது ஹமாஸ் அமைப்பு. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் 30 இற்கும் மேற்பட்ட ஹமாஸ் அமைப்பினர் உயிரிழந்ததாகச் சொல்லப்படுகிறது. ஹமாஸ் அமைப்பின் தலைமை அலுவலகத்தின் மீது குண்டுகள் வீசி தரைமட்டமாக்கியிருக்கிறது இஸ்ரேல் ராணுவம்.

இதற்கு பதிலடியாக ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டது ஹமாஸ் அமைப்பு. இதனால் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருப்பதாக இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது. இவ்வாறு இரு தரப்பும் மாறி மாறித் தாக்குதல்களில் ஈடுபட்டுவருவதால் ஜெருசலேமில் போர்ச்சூழல் நிலவிவருகிறது.

இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்னையில் ஆழ்ந்த அக்கறை கொண்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்திருக்கிறது. பதற்றத்தைக் குறைக்க இரு நாடுகளும் இணைந்து ஒரு தீர்வை நிறுவ வேண்டும். பாலஸ்தீனியர்களும் இஸ்ரேலியர்களும் சுதந்திரம், பாதுகாப்பு, செழிப்பு உள்ளிட்ட அனைத்தையும் சமமாகப் பெறுவதற்குத் தகுதியானவர்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.

இஸ்ரேலும் பாலஸ்தீனமும் தாக்குதல்களை நிறுத்திக்கொண்டு, அமைதி காக்க வேண்டும் என ஐக்கிய அரபு நாடுகள் கேட்டுக்கொண்டிருக்கிறது.

உடனடியாக மோதலை நிறுத்திக்கொள்ளுங்கள், முழு போரை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறீர்கள். அமைதியை மீட்டெடுக்க ஐ.நா அனைத்து முயற்சிகளையும் செய்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியிருக்கிறது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

ஜெருசலேம் புனிதத் தலத்தில் வெடித்த வன்முறை! என்ன காரணம்?

உடனடியாக மோதலை நிறுத்திக்கொள்ளுங்கள், முழு போரை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறீர்கள் - ஐ.நா

ஜெருசலேம் புனிதத் தலத்தில் வெடித்த வன்முறை! என்ன காரணம்?

Search here