Search

Menu

Keeping you Informed News and Views..

இலங்கை அமைச்சரவையில் உள்வாங்கப்பட்ட ஐந்தாவது ராஜபக்ச

அமெரிக்க இரட்டை பிரஜா உரிமையைக் கொண்ட பசில் ராஜபக்ச, நாடாளுமன்றத்தில் இன்று காலை எம்.பியாக பதவியேற்றுக் கொண்டார்.

இலங்கை அமைச்சரவையில் உள்வாங்கப்பட்ட ஐந்தாவது ராஜபக்ச

இலங்கையில் பசில் ராஜபக்ச நிதியமைச்சராக இன்று பதவியேற்றுக்கொண்டார்.

அமெரிக்க இரட்டை பிரஜா உரிமையைக் கொண்ட பசில் ராஜபக்ச, நாடாளுமன்றத்தில் இன்று காலை எம்.பியாக பதவியேற்றுக் கொண்டார்.

இதன்பின்னர் நிதியமைச்சராகவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.

அமைச்சரவையில் ஐந்தாவது ராஜபக்ச

அமைச்சரவையின் பிரதானியாக கோட்டாபய ராஜபக்ச உள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன்

நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்சவும்,

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவும் பதவி வகிக்கின்றனர்.

தற்போது புதிதாக பசில் ராஜபக்ச நிதியமைச்சராக பதவியேற்றுள்ளார்.

இதனைத்தவிர சசிந்திர ராஜபக்ச இராஜாங்க அமைச்சராக பதவி வகிக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

இரட்டை பிரஜாவுரிமை கொண்டிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச

ராஜபக்ச குடும்பத்தில் தற்போதைய ஜனாதிபதியும் அமெரிக்க இரட்டைக் குடியுரிமை கொண்டிருந்தார். கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக அவர் தனது அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்திருந்தார். அதன்பின்னர் அவர் ஜனாதிபதியாக போட்டியிட்டார்.

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச வெற்றீட்டியதன் பின்னர் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட பொதுத் தேர்தலில் ராஜபக்ச அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றது.

இதன்பின்னர் இலங்கை அரசியலமைப்பில் 20ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு 150 எம்.பிக்களின் ஆதரவு தேவையென்ற போதிலும் 148 உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இருந்தனர்.

20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டபோது எதிர்க்கட்சியைச் சேர்ந்த 6 எம்.பிக்களை ஆளும் கட்சி வளைத்துப்போட்டது.

20ஆவது திருத்தச் சட்டத்தில் முக்கியமாக பிரதமருக்கு இருந்த அதிகாரங்கள் குறைக்கப்பட்டு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது. இதன்மூலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை வலுப்படுத்தப்பட்டது. இதற்கு மேலதிகமாக இரட்டை பிரஜா உரிமை கொண்ட ஒருவர் நாடாளுமன்றத்திற்கு வர முடியாது என்ற சரத்து திருத்தப்பட்டது. இந்தத் திருத்தம் செய்யப்பட்ட போதிலும், இரட்டை பிரஜா உரிமை கொண்ட எவரும் அப்போது நாடாளுமன்றம் வரவில்லை.

இந்த நிலையில், ஆளும் கட்சியின் தேசிய அமைப்பாளராகவும், ஜனாதிபதியின் விசேட செயலணி பலவற்றின் தலைவராகவும் பதவி வகித்து வரும் பசில் ராஜபக்ச தற்போது நாடாளுமன்றத்தின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நாடாளுமன்றத்திற்குள் நுழைந்துள்ளார். தற்போது நிதி மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சராகவும் பதவியேற்றுள்ளார்.

இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், இதற்கு பசில் ராஜபக்ச தீர்வு காண்பார் என ஆட்சியின் அமைச்சர்கள் உள்ளிட்ட உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் பிரசாரம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை. வரும் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதை இலக்கு வைத்தே பசில் ராஜபக்ச தற்போது பணிகளை ஆரம்பித்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பிரதமர் மகிந்த ராஜபக்ச, தனது மகன் நாமல் ராஜபகச்வை ஜனாதிபதியாக அல்லது பிரதமராக பதவி அமர்த்துவதற்கான காய் நகர்த்தல்களையும் முன்னெடுத்துள்ளதாக தென் இலங்கை அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

இலங்கை அமைச்சரவையில் உள்வாங்கப்பட்ட ஐந்தாவது ராஜபக்ச

அமெரிக்க இரட்டை பிரஜா உரிமையைக் கொண்ட பசில் ராஜபக்ச, நாடாளுமன்றத்தில் இன்று காலை எம்.பியாக பதவியேற்றுக் கொண்டார்.

இலங்கை அமைச்சரவையில் உள்வாங்கப்பட்ட ஐந்தாவது ராஜபக்ச

Search here